ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் சரிந்துள்ளதாக சுட்டிக்காட்டி, இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தனது கட்சி நீண்டகாலமாகவே ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி வருவதாகவும், அரசியல் மக்களைப் பிரிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது என்றும், அதில் வெறுப்பு இடம் பெறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் தொலைவில் உள்ள நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அரசாங்கம் முன்னுரிமையுடன் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
அரிசி, கரும்பு மற்றும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களை எடுத்துக்காட்டிய அவர், உள்ளூர் விவசாயத்தை ஆதரிப்பதற்கு பதிலாக உணவை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், புலிகளின் பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் கூட அரசாங்கம் புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை தவறாக கையாள்ந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கங்களுக்குள் நிலவும் உள் மோதல்களை சுட்டிக்காட்டிய அவர், ‘வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் வீழ்ந்துள்ளது’ எனவும் வலியுறுத்தினார்.

