இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்திற்கான வலுவான சான்றாக செம்மணி மனிதப்புதைகுழி அமைகின்றது என்றும், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக இணையனுசரணை நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளன.
அவர்கள் அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய பிரேரணை வரைவில் மூன்று முக்கிய கூறுகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அவை: சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மேலும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொள்ளல்.
பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜெர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்சர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு உள்ளிட்ட அமைப்புக்களைத் தளமாகக் கொண்டு பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் இயங்கும் 18 அமைப்புகளும் இந்த பரிந்துரையில் கையொப்பமிட்டுள்ளன.
அவர்கள் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், பேரவையில் பங்கேற்கும் உறுப்பினர்நாடுகளுக்கும் இந்த ஆவணத்தை அனுப்பியுள்ளனர்.
இந்த பரிந்துரையில், கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்றும், இதனால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தாயகம் விட்டு அகதிகளாக தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் வெளிவந்தும், இலங்கை தண்டனைகளிலிருந்து தப்பிக்கிறது.
சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமையும் தொடர்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள், குறிப்பாக குழந்தைகளின் எச்சங்கள் அடங்கியவை, இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்திற்கான வலுவான சான்றுகளாகக் கருதப்படுகின்றன.
எனவே, 1948 முதல் இன்றுவரை இடம்பெற்ற அனைத்து அட்டூழியங்களையும் விசாரிக்கக்கூடியவாறு, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அதேபோல், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்வைக்க வலுவான ஆதாரங்களுடனான 15 முதல் 20 முக்கிய வழக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கூறுகள் புதிய பிரேரணையில் இடம்பெற வேண்டும்.
மேலும், படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழர் காணிகளை விடுவித்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க சர்வதேச ஒத்துழைப்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா நிபுணர்கள் பங்குபெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

