கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றும் யோசனையை யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ. ஜெபரட்ணம் அடிகளார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பில் அவர் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
‘தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்’ என்ற கருப்பொருளில் அக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வமத மாநாடு நடைபெறவுள்ளதாகவும் பேரவை அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் சர்வமத பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் யாழ்–கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மௌலவி எம். ரசிம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெபரட்ணம் அடிகளார், ‘கச்சத்தீவு புனிதமான இடம். அங்கு புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இலங்கையும் இந்தியாவையும் சேர்ந்த பக்தர்கள் அங்கு வந்து யாத்திரை செய்கின்றனர். ஆகவே அந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார்.
அவர் மேலும், ‘ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் கச்சத்தீவைப் பார்வையிட்டது, அது இலங்கைக்கு சொந்தமான தீவு என்பதைக் கூறுவதே பிரதான காரணமாக இருக்கலாம்.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு அரசியல்வாதிகள் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது எனக் கூறி வரும் நிலையில், ஜனாதிபதி தனது கால்தளத்தை அங்கே பதித்து ‘இது இலங்கைக்கு சொந்தமானது, யாரும் உரிமை கோர முடியாது’ என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அதை சுற்றுலாத்தலமாக்கும் யோசனை இரண்டாம் நிலை கருதுகோளாக இருக்கலாம்’ என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்றுவது எந்த மதத்தவராலும் ஏற்க முடியாதது எனவும், அங்கு வசிப்போருக்கு மாற்று காணிகள் வழங்கி சமாதானமாக பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்>செம்மணியில் இன்று ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்.

