கம்பஹா யக்கலவில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்தனர்.
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த கட்சியான முன்னணி சோசலிசக் கட்சி, இந்தத் தாக்குதலுக்கு ஜே.வி.பி. அரசியல்வாதிகள் சிலரை பொறுப்பாகக் குற்றம்சாட்டி, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால் அந்தக் கோரிக்கையை காவல்துறை புறக்கணித்தது.
காவல்துறைத் தலைமை அதிகாரி பிரியந்த வீரசூரிய, காவல்துறையில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்றும், தாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம் என்றும் கூறி வந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக காவல்துறை, குளுP ஆதரவாளர்களையே அலுவலகத்தை விட்டு வெளியேறச் சொல்லி, புகார் அளித்து நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது.
இதே நிலைமையில் குளுP ஆதரவாளர்களே தாக்குதலாளிகளாக இருந்திருந்தால், காவல்துறை வேறுவிதமாக நடந்திருக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த சம்பவம் காவல்துறை இன்னமும் பழைய நடைமுறையிலிருந்து மாறவில்லை என்பதற்கான சான்றாகும்.
2022 ஆம் ஆண்டு கொழும்பு கல்லேபேஸ் அருகே அமைதியான அரகலய போராட்டக்காரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது காவல்துறை எவ்வாறு செயலிழந்தது என்பதையும் நினைவூட்டுகிறது.
அப்போது காவல்துறை தாக்குதலைத் தடுக்காமல் இருந்ததால், அதன் பின்விளைவாக நாடு முழுவதும் பழிவாங்கும் வன்முறை பரவியது.
அப்போதைய காவல்துறைத் தலைமை அதிகாரி தேசபந்து தென்னகோன் தற்போது சட்டநடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளதோடு, அந்நாளில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவிடம் கூட குற்றப்புலனாய்வு துறை வாக்குமூலம் பெறத் திட்டமிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய காவல்துறைத் தலைவர் அப்போதும் மூத்த அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
முந்தைய ஆட்சிக் காலங்களில், அரசாங்க ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக காவல்துறை எதுவும் செய்யாமல் இருந்தது பொதுவாக அறியப்பட்டதே.
அப்போதிருந்த காவல்துறை பேச்சாளர், அரசாங்க ஆதரவாளர்கள் கைகளில் இருந்த வாள்கள் போன்ற ஆயுதங்கள், தெருவில் சுற்றித் திரியும் நாய்களை விரட்டிக் கொள்வதற்காகவே எனக் கூறியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.
யக்கல அலுவலகம் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி சோசலிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அந்தக் கட்டிடம் தொடர்பாக தாங்கள் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளதாகக் கூறி, கட்டிடம் தங்களுக்கு சொந்தமானது என்று வலியுறுத்தினர்.
உண்மையிலேயே நீதிமன்றத் தீர்ப்பு ஜே.வி.பி.க்கு சாதகமாக இருந்தால், அதை அமல்படுத்த நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உரிமையில்லை.
சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்ற அரசாங்கக் கோரிக்கையே, இத்தகைய திடீர் நடவடிக்கைகளால் கேள்விக்குறியாகிறது.
முன்னாள் பிரதியமைச்சர் நிமல் லஞ்சா, 20 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதுபோல, யக்கல அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி நால்வரைக் காயப்படுத்தியவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.
முன்னணி சோசலிசக் கட்சி கட்டிடம் தங்களுக்கு சொந்தமானதல்லாமல் பலவந்தமாகப் பயன்படுத்தி வந்திருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு கிடையாது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதித்துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
சட்டத்தை கையில் எடுப்பதை அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், யாருக்கும் அனுமதிக்கக் கூடாது.

