வடக்கும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நீடித்து வரும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) ஒத்துழைப்புடன் விசேட செயற்திட்டமொன்றை தயாரித்து வருகிறது.
வட, கிழக்கு பகுதிகளில் நில எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரசாங்க கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்புக்கள் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளன.
இந்த பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்துவதற்காக புதிய செயற்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்செயற்திட்டத்தின் கீழ் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறையினர், சிவில் சமூக அமைப்புகள், மேலும் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினரும் உள்வாங்கப்படவுள்ளனர்.
மேலும், வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துதல், படையினரிடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது, நில எல்லைகளை சரியாக மீள நிர்ணயிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை உள்ளூர் அமைப்புகளுக்கு வழங்குதல் போன்றவை இச்செயற்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
