மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக இன்று (05) காலை எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாருக்கு விஜயம் செய்தனர்.
சாந்திபுரம், சௌத்பார், தாழ்வுபாட்டு, தோட்டவெளி, ஓலைத்தொடுவாய், பேசாலை மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம் 13 காற்றாலை மின் கோபுரங்கள் (70 மெகாவாட் திறன்) அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மக்களுடனான முதலாவது கலந்துரையாடல் சாந்திபுரம் மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர், அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஆனால், மக்களெல்லாம் ஒருமித்து “எமது கிராமங்களுக்கு காற்றாலை வேண்டாம்” என்று வலியுறுத்தினர். ஏற்கனவே மன்னார் தீவில் இயங்கிவரும் 30 காற்றாலை மின் கோபுரங்களால் அசௌகரியங்கள் ஏற்பட்டதோடு, மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
“நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் காற்றாலை மின் கோபுரங்களை அப்புறப்படுத்த வேண்டும். எமது பகுதிக்குள் புதிய காற்றாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம்” என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, அமைச்சர் தலைமையிலான குழுவினர் எவ்வித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து வெளியேறினர்.
இதையும் படியுங்கள்>ரணில் விக்ரமசிங்க தற்போது வாசிக்கும் நூல்.

