எல்ல–வெளவாயைச் சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது.
விபத்து நேற்று (05-09) நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எட்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் தங்காலை நகரசபை செயலாளர் டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மோசமான நிலையில் உள்ளனர் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் பேருந்து அதிக வேகத்தில் சென்றதாகவும், கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு உயிர் தப்பியவர், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஓட்டுனர் பிரேக் செயலிழந்துவிட்டதாக எச்சரித்ததாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
‘அருவிக்கருகே உள்ள வளைவில் அவர் பிரேக் இல்லை என்றார்.
அடுத்த வளைவில் மீண்டும் அதையே சொன்னார். பின்னர் பேருந்து ஒரு ளுருஏ வாகனத்தை மோதியதும் சாலையை விட்டு கீழே சரிந்ததும் பார்த்தோம்’ என்று அவர் விளக்கினார்.
போலீசார், இராணுவம், வான்படை, தீயணைப்பு படையினர் மற்றும் கிராமவாசிகள் இணைந்து நேற்று அதிகாலை வரை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பயணிகளை மீட்க முயன்ற இரு பொதுமக்களும் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் தங்காலை நகரசபையின் 12 ஊழியர்களும் அடங்குகின்றனர்.
மோசமான நிலையில் உள்ளவர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல இலங்கை வான்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
மேலும் இந்த விபத்து தொடர்பாக விசேட விசாரணையை முன்னெடுக்க வாகனப் போக்குவரத்து திணைக்களம் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.

