உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அந்த முறைமை பொருத்தமற்றதென அறிவிக்க வேண்டுமென கபே தெரிவித்துள்ளது

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால், அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி கபே அலுவலகத்தில் நேற்று (05-09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இவ்சந்திப்பில் மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையேற்றிருந்தார்.

மனாஸ் மக்கீன் மேலும் தெரிவித்ததாவது:
2008 முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் கபே அமைப்பு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது.
தேர்தல் அல்லாத காலங்களிலும் வாக்காளர்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடாத்தி வருகிறோம்.
தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படுகிறதா என்பதை எப்போதும் கவனித்து வருகிறோம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே அரசுகளுக்கு சாதகமான நேரங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சில நேரங்களில் பதவிக்காலம் முடிந்தும் பல மாதங்கள், வருடங்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டதும் உண்டு.
ஜனாதிபதி தேர்தல் கூட ஒரு வருட கால அவகாசம் இருந்தபோதும், அப்போது பதவி வகித்த ஜனாதிபதி தனது விருப்பப்படி முன்கூட்டியே தேர்தலை நடத்தியது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடைசியாக 2012 செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெற்றது.
அந்த சபையின் பதவிக்காலம் 2017 செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தது.
ஆனால் அதன் பின்னர் இன்று வரை தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
நடக்கவிருப்பதாக பலமுறை அறிவிக்கப்பட்டும், சட்ட சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்ட சிக்கல்கள் உண்மையில் இருந்தால், அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எல்லை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இல்லையெனில், இன்னும் பல வருடங்கள் தேர்தலை நடத்தாமல் செல்லும் அபாயம் உள்ளது.
தற்போது பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவரும் அரசு, தேவையான சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரம் பெற்றுள்ளது.

கபே அமைப்பு கடந்த மாதம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.
மாகாணசபை தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மக்களிடம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மாகாணசபை முறைமை பொருத்தமற்றதாக நினைத்தால், அதை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும்.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 2017 வரை ஆட்சி செய்தனர்.
அதன்பின் சுமார் ஐந்து வருடங்களாக ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான நிலைமை என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் மாகாணசபை தேர்தலை நடத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்காததால் அது சாத்தியமாகவில்லை.
ஆனால் தற்போது ஜனநாயகத்தை மதிப்பதாக தனது கொள்கை பிரகடனத்தில் அறிவித்துள்ள அரசு, அவசரமாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாகாணசபை முறைமை பொருத்தமற்றது என்பதையும் அதை நீக்கத் தீர்மானித்துள்ளதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மனாஸ் மக்கீன் வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்