இன்றிரவு இலங்கையர்கள் அபூர்வமான ‘இரத்த சந்திரன்’ எனப்படும் விண்வெளி நிகழ்வை காணும் வாய்ப்பு பெறுகின்றனர் என கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் ஆர்தர் சி. க்ளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
முழு சந்திர கிரகணம் இன்று (07-09) இரவு ஆரம்பமாகி நாளை (08-09) அதிகாலை வரை நீடிக்கும். இந்த காலத்தில் சந்திரன் கடும் சிவப்பு நிறத்தில் தோன்றும்.
பேராசிரியர் ஜயரத்னவின் விளக்கமாவது: ‘கிரகணம் இன்று இரவு 8.58 மணிக்கு ஆரம்பமாகி, நாளை அதிகாலை 2.25 மணிக்கு முடிவடையும்.
மொத்தம் 5 மணி 22 நிமிடங்கள் நீடிக்கும். பகுதி கிரகணம் இரவு 9.57 மணி முதல் அதிகாலை 1.26 மணி வரை காணக்கூடியதாக இருக்கும்.
முழு கிரகணம் இரவு 11.01 மணி முதல் 12.21 மணி வரை இடம்பெறும்.
அப்போது பூமி நேரடியாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருவதால் சந்திரன் கிட்டத்தட்ட கருமை நிறத்தில் தோன்றும்’ என்றார்.
இது இவ்வருடத்தின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
உலக மக்கள் தொகையின் சுமார் 85 சதவீதத்தினர் இதனை காண முடியும்.
பல கிரகணங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும் நிலையில், இந்த அபூர்வ நிகழ்வு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தென்படும்.
இலங்கையில் இதனை தெளிவாகக் காண சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் முழு நிலவிற்கும் இடையில் சென்று அதன் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது நிகழ்கிறது.
இதுவே ‘இரத்த சந்திரன்’ என அழைக்கப்படும் அபூர்வ காட்சியை உருவாக்குகிறது

