ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு திங்கட்கிழமை (08-09) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றபோது, இலங்கையை மொத்தம் 43 நாடுகள் ஆதரித்துள்ளது
இந்த நாடுகளில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) சார்பில் குவைத் மற்றும் அதனுடன் பஹ்ரைன், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கியுள்ளன.
மேலும் எத்தியோப்பியா, கோட் திஸ்வாயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, தாய்லாந்து, வானுவாட்டு, வட கொரியா, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அசர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலரஸ், எகிப்து, வெனிசுலா, மாலதீவு, கியூபா, தென் சூடான், சூடான், ரஷ்யா மற்றும் புருண்டி ஆகியவை இணைந்திருந்தன.
இவை அனைத்தும் இலங்கை மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக வரவேற்றதுடன், மனித உரிமைகள் உயர் ஆணையரின் இலங்கை பயணத்தையும் ஒத்துழைப்பின் அடையாளமாகக் கண்டன.
இலங்கை முன்னெடுத்துவரும் சட்ட திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்களை அங்கீகரித்து, அந்த தேசிய முறைகளை ஆதரிக்க பேரவையும், சர்வதேச சமூகமும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தின.
மேலும் இலங்கை மீது சர்வதேச விசாரணை திணித்தால் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்து பிளவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தன.
நாட்டை குறிவைத்து தனிப்பட்ட விசாரணை முறைகளை திணிப்பது, பேரவையின் சார்பற்ற தன்மை, பொதுத்தன்மை மற்றும் நீதிநிலை ஆகிய அடிப்படை நோக்கங்களை பாதிக்கும் எனவும் அவை சுட்டிக்காட்டின.
மனித உரிமைகள் தொடர்பான இரட்டைச் சீர்முறை மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அதை பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து கவலை தெரிவித்த இந்நாடுகள், விளைவு கொண்ட உரையாடல் மற்றும் ஒத்துழைப்பே மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான சிறந்த பாதை என வலியுறுத்தின.
இதற்கிடையில், பிரித்தானியா (UK) இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ‘வெளிப்படையான மற்றும் நீடித்த முன்னேற்றம்’ தேவைப்படுவதாகக் கூறியது.
குறிப்பாக, பெருமளவு மக்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களை அகழ்ந்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப விசாரிப்பது முக்கியம் எனவும் தெரிவித்தது.
மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானிய தூதர் எலியனார் சாண்டர்ஸ் தனது உரையில், கைதுகள், காவல் நிலையங்களில் மரணங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது மிரட்டல்கள், சிறுபான்மை சமூகங்கள் மீது தாக்குதல்கள் போன்ற விடயங்களில் ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.
குறிப்பாக, அரசாங்கம் அதை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அவர் கடுமையாக சாடினார்.
மேலும், இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களின் பணியை மீண்டும் வலுப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகள் அனைத்துக் குழுக்களையும் உள்ளடக்கியதாகவும், சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பங்கு மற்றும் நம்பிக்கையைப் பெற்று அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இறுதியாக, இவ்விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் பிரித்தானியா உறுதியளித்தது.

