சதொச வர்த்தக நிறுவனத்தில் 24 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனுடன் 5 பில்லியன் ரூபா கடனும், 11 பில்லியன் ரூபா வழங்குநர் நிலுவையும் இருப்பது தெரியவந்துள்ளதென வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதிஅமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் சதொசா 24 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்ததுடன், 5 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையும், 11 பில்லியன் ரூபா அளவுக்கு வழங்குநர்களிடம் கடன் நிலுவை இருப்பதையும் குறிப்பிட்டார்.
‘இதனால் வழங்குநர்கள், சதொசாவுக்கு பொருட்களை வழங்குவது மற்றவர்களுக்கு வழங்கிய பினனரே சதொசவுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்
சதொசா நாடு முழுவதும் 454 கிளைகளைக் கொண்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 250 கிளைகள் நட்டத்தில் இயங்குவதாகவும் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் கிளைகளை ஆய்வு செய்தபோது, சில கிளைகள் மக்கள் கூடாத இடங்களில் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.
சில கிளைகள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான கட்டிடங்களிலும் இயங்குகின்றன.
இவ்வாறான கிளைகள் எந்த வருமானத்தையும் உருவாக்கவில்லை. அவற்றை வரவிருக்கும் மாதங்களில் இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்,’ எனவும் அவர் விளக்கினார்.
சதொசாவிலும், கூட்டுறவு நிறுவனங்களிலும் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பில் முழுமையான தணிக்கை நடந்து வருவதாக வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் முன்னர் அறிவித்திருந்தது.
பல நிறுவனங்கள் பெரிய வருமானத்தை உருவாக்கினாலும், அதேசமயம் மோசடி மற்றும் தவறான மேலாண்மைக்கு அதிக ஆபத்தான சூழல் இருப்பதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லங்கா சதொசா, இலங்கையின் மிகப்பெரிய அரசுடைமையிலான சில்லறை விற்பனை வலையமைப்பாகும். 450க்கும் மேற்பட்ட கிளைகள், 4,500க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட இந்நிறுவனம், மக்களுக்கு மலிவான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

