இலங்கையின் போருக்குப் பிந்தைய பொறுப்புக் கூறலில் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான செயல்முறை அவசியம் என ஐக்கிய இராச்சியம் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த திங்கட்கிழமை (08-09) இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்தக் கருத்தை பிரிட்டனின் மனித உரிமைகள் தூதர் எலியனோர் சாண்டர்ஸ் முன்வைத்தார்.
அவர் தனது உரையில், ‘சமரசமும் பொறுப்புக் கூறலும் தொடர்பான எந்தச் செயல்முறையும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவும் இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைப் பெற்று, முந்தைய பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
சாண்டர்ஸ் வாசித்த உரையில் மேலும் குறிப்பிடப்பட்டது: ‘இலங்கை தொடர்பான உயர் ஆணையரின் அறிக்கைக்கும் அண்மைய விஜயத்திற்கும் பிரிட்டன் நன்றி தெரிவிக்கிறது.
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை வரவேற்கிறோம்.
ஆனால், தெளிவான மற்றும் நிலையான முன்னேற்றம் அவசியமானது என்பதை வலியுறுத்துகிறோம்.
மனித புதைகுழிகள் அகழ்ந்து விசாரணை செய்வது முக்கியமான செயல். இது சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.
‘தன்னிச்சையான கைது, காவல் நிலையங்களில் உயிரிழப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றில் உயர் ஆணையர் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் கவலைகளை பிரிட்டனும்; பகிர்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்
‘அதோடு, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் பிரிட்டன்; ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இதை நீக்குவதாக அரசாங்கம் முன்பு அளித்த வாக்குறுதிகள் இருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
காணாமல் போனவர்கள் தொடர்பான உள்ளக நிறுவனங்களின் பணிகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது
‘மேலும், போர் கால பாலியல் வன்முறை தொடர்பாக உயர் ஆணையரின் அலுவலகம் மேற்கொண்டு வரும் முக்கியமான பணிகளை தொடர வலியுறுத்துகிறோம்.
இந்த விவகாரம் இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறிய பிரிட்டன், இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்;ற தயார் நிலையில் பிரிட்டன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

