ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தச்சோகை மற்றும் அதிக உடல் எடை ஆகிய மூன்று பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் எச்சரித்துள்ளது.
உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கக்கூடும் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ‘குநநனiபெ Pசழகவை: ர்ழற குழழன நுnஎசைழnஅநவெள யசந குயடைiபெ ஊhடைனசநn’ எனும் தலைப்பில், 2000ஆம் ஆண்டிலிருந்து தென் ஆசியாவில் 5–19 வயதுக்குட்பட்ட அதிக உடல் எடையுடன் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐமடங்கு அதிகரித்து தற்போது 7 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளிடையே உள்ள பெருந்தொப்பை இரட்டிப்பு அளவுக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தச்சோகை மிகுந்த அளவில் தொடர்ந்தும் நிலவுகிறது.
உலகில் மிக அதிக ஊட்டச்சத்து குறைபாடு சுமையைத் தாங்கும் பிராந்தியமாகவும் தென் ஆசியா உள்ளது.
5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு வளர்ச்சி தடுப்பு உள்ளது.
பத்து குழந்தைகளில் ஒருவருக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
நான்கு குழந்தைகளில் ஒருவர் குறைந்த பிறப்பு எடையுடன் பிறக்கிறார்.
மேலும், பெண்கள் மற்றும் இளம் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘ஒவ்வொரு குழந்தைக்கும் சீரான உணவு உட்கொள்வதற்கான உரிமை உள்ளது.
நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் போது குழந்தைகள் உடல், மன வளர்ச்சியில் ஆரோக்கியமாக மாறுவர்.
அதிக சக்தியுடன் கற்றுக் கொள்வதிலும், விளையாடுவதிலும், தங்கள் கனவுகளை அடைவதிலும் முன்னேறுவர்.
எனவே தென் ஆசியா முழுவதும் அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து, இந்த மூன்று மடங்கு சவாலையும் வெல்ல வேண்டும்,’ என யூனிசெஃப் தென் ஆசிய இயக்குநர் சஞ்சய் விஜேசேகரா தெரிவித்துள்ளார்.
அறிக்கையில், குழந்தைகள் வளர்ந்து வரும் உணவுப் பரிமாணங்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023இல் நடத்தப்பட்ட ஆய்வில், 7,500க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றனர்.
சில பள்ளிகளில் சமைத்த உணவு வழங்கப்பட்டாலும், அதிக அளவில் பெக்கெட் உணவுகள், இனிப்புப் பானங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்கள் கிடைக்கின்றன.
பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் விளம்பரங்கள் அவர்களின் உணவு தேர்வுகளை பாதிப்பதாக தெரிவித்தனர்.
இவ்வாறான தயாரிப்புகள் நீண்ட கால கையிருப்பு வசதியுடனும், விரிவான விநியோக வலையமைப்புடனும் மிகவும் தொலைவான பகுதிகளையும் எளிதில் சென்றடைந்துள்ளன.
இதனால், பள்ளிகளின் 5 கி.மீ சுற்றளவில் ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலைத் தடை செய்ய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு நிறுவனமும் குழந்தைகளின் ஆரோக்கிய இழப்பிலிருந்து இலாபம் காணக்கூடாது. குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளால் சூழப்பட்ட சூழலில் வளர அரசுகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ என விஜேசேகரா மேலும் தெரிவித்தார்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், தென் ஆசியா பல்வேறு தேசிய திட்டங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தச்சோகைக்கு எதிராக வெற்றிகரமாக போராடிய வரலாற்றை கொண்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு இரும்பு மற்றும் ஃபாலிக் அமிலச் சேர்த்திகள் வழங்கப்படுவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு ஆலோசனை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ‘ட்ரான்ஸ் ஃபாட்’ க்கு வரம்பு விதிக்கப்படுவது, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வாங்க பண உதவி வழங்கப்படுவது, முன்னெச்சரிக்கை பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் ஊக்குவிக்கப்படுவது போன்ற பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய முயற்சிகளுக்கும் இடையில், ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் கோடிக்கணக்கான குழந்தைகளின் திறமையை பறித்து, தென் ஆசிய நாடுகளுக்கு டிரில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், யூனிசெஃப் தென் ஆசிய அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குழந்தைகள், குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லாத சிறுமிகள் உட்பட அனைவரையும் சென்றடையும் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை விரிவாக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வாங்க மட்டுமே அந்த நிதியை பயன்படுத்தும் வகையில், பண உதவிகளுடன் ஊட்டச்சத்து கல்வியும் இணைக்கப்பட வேண்டும்.
பள்ளிகளின் அருகிலும், ஆன்லைன் தளங்களிலும், விற்பனை நிலையங்களிலும் ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரம் மற்றும் விற்பனையைத் தடுக்க கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
மிக அதிகமாக செயலாக்கப்பட்ட உணவுகள் குழந்தைகளின் உடல் நலத்தையும் சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான பொது விழிப்புணர்வை உயர்த்த வேண்டும்.
கூட்டு முயற்சிகள் மூலமாகவே இந்த மூன்று மடங்கு ஊட்டச்சத்து சுமையை வெல்ல முடியும். அதற்காக அரசுகள் தொடர்ந்து குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கான முதலீடுகளை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும்.

