நேபாள அரசியல் பெரும் பரபரப்புக்கிடையில் அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று (12-09) இரவு கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றம் இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதோடு, அடுத்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் அறிவித்தார்.
இளைய தலைமுறையினரின் போராட்டங்களும் வன்முறையும் தீவிரமடைந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆட்சி எதிர்ப்பை சந்தித்த பிரதமர் சர்மா ஒலி, செப்டம்பர் 9ஆம் திகதி பதவி விலகினார்.
தொடர்ந்து நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை இராணுவம் பொறுப்பேற்றதன் பின்னர் வன்முறைகள் தணிந்து, படிப்படியாக அமைதி திரும்பி வருகின்றது.
போராட்டங்கள் உச்சத்தை எட்டியபோது, சமூக வலைத்தளங்களை தடை செய்த அரசின் நடவடிக்கை இளைஞர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது. ‘ஜென் சி’ தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் கலந்துரையாடினர்.
இடைக்கால பிரதமர் பதவிக்காக உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
அரசியல் கட்சிகள் அனைத்தும், மேலும் போராட்டக்காரர்களும் சுசீலா கார்கிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர் இடைக்கால பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி பவுடெல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் சுசீலா கார்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னதாக 2016ஆம் ஆண்டு, நாட்டின் முதல் பெண் பிரதம நீதியரசராக 11 மாதங்கள் பதவி வகித்திருந்தார்.
அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய உறுதியான நிலைப்பாடே, இன்றைய தலைமுறையினர் அவரைத் தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

