வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
செப்டம்பர் 8ஆம் தேதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆம் அமர்வில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றினார்.
அமர்வில் உரையாற்றியபோது, இலங்கையின் உள்நாட்டு சமரச முயற்சிகளின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
வெளிப்புறத்திலிருந்து திணிக்கப்படும் எந்தவொரு செயன்முறைகளையும் இலங்கை எதிர்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா உயர் ஆணையாளர் வோல்கர் டுர்க் உடனும் அமைச்சர் சந்திப்பு மேற்கொண்டார்.
இதில், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா வழங்கக்கூடிய ஒத்துழைப்பும் உதவிகளும் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, பொருளாதார, சமூக, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்பட அனைத்து உரிமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர் ஹேரத், பேரவையில் முன்வைத்த உரையுடன் தொடர்புடைய விஷயங்களில் மேலதிக புதுப்பிப்புகளையும் வழங்கினார்.
இந்நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசாங்கத்திற்கு தேவையான காலமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உயர் ஆணையாளர் வோல்கர் டுர்க், இலங்கை விஜயத்தை மேற்கொண்டதற்கான வாய்ப்பையும், அரசாங்கம் அளித்த ஒத்துழைப்பையும் பாராட்டினார்.
மேலும், நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர், சுவிட்சர்லாந்தை சேர்ந்த தூதர் யூர்க் லௌபரையும் அமைச்சர் சந்தித்தார்.
அமைச்சர் விஜயம், பேரவையுடனான உயர் மட்ட அரசியல் தொடர்பின் அடையாளம் என தூதர் வரவேற்றார்.
மேலும், பேரவையில் இடம்பெற்ற உரையாடலின் போது இலங்கைக்கு ஆதரவாகக் கருத்துரைத்த பல நாடுகளின் தூதர்களையும் அமைச்சர் சந்தித்தார்.
அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் இலங்கை நன்றியை தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

