இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும், நீடித்து வரும் ‘வேலையின்படி வேலை’ போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு உயர்த்த முடிவு செய்துள்ளன.
இக்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, முக்கிய பணியாளர் நியமனங்கள் மற்றும் மறுசீரமைப்புச் சிக்கல்கள் குறித்து பல வாரங்களாக மௌனமாக இருந்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை பொறியியலாளர் சங்கத் தலைவர் தனுஷ்க பரக்ரமசிங்க ஊடகங்களிடம் பேசியபோது, ‘அரசாங்கத்திலிருந்தும், அமைச்சரிடமிருந்தும், செயலாளரிடமிருந்தும் எந்த பதிலும் கிடைக்காததால், எங்களுக்குத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இரண்டாம் கட்டத்தை தொடங்க தீர்மானித்துள்ளோம்.
முதல் கட்டம் தொடரும். இரண்டாம் கட்டம் தொடர்பாக செயலாளர், சபைத் தலைவர், பொது முகாமையாளர் ஆகியோருக்கு செப்டம்பர் 15ஆம் தேதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்,’ என்றார்.
அமைச்சகம் வாக்களித்திருந்த நியமனக் கடிதங்கள் தொடர்பான ஆவணங்கள் இதுவரை வரவில்லை என்றும், அவை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வந்தால் அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை மீளாய்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊநுடீநுரு வின் விளக்கத்தில், மின்சார சபையின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் தொழில்நுட்ப பணியாளர்களின் பற்றாக்குறைதான்.
கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 4,000 பேர் பொறியாளர்கள், கணக்காளர்கள், மனிதவள அலுவலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்தோர் சபையை விட்டு சென்றுள்ளனர்.
இதனால் பணியாளர் எண்ணிக்கை 26,000 இலிருந்து 22,000 ஆகக் குறைந்துள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் தொழில்நுட்பப் பணியாளர்களே. தற்போது மீதமுள்ள ஊழியர்கள் பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டு சோர்வடைந்து வருவதாகவும் பரக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அவர் மேலும், மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அரசாங்கம் முன்வைத்துள்ள தன்னார்வ ஓய்வு திட்டம் ஆபத்தானது எனவும், ‘அரசாங்கம் மக்களை ஓய்வூதியம் பெறும் நோக்கில் அழுத்தம் கொடுக்ககூடாது.
அனுபவமுள்ள தொழில்நுட்ப பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான சரியான முறைமை தேவை.
அனைவரையும் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை; ஆனால் இவர்கள் இல்லாமல் ஊநுடீ இயங்க முடியாது.
வெளியிலிருந்து அனுபவமற்றவர்களை கொண்டு வந்தால் அது பயனில்லாதது. புதியவர்களைப் பயிற்றுவிக்க குறைந்தது இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படும்,’ என்று எச்சரித்தார்.
பணியாளர்கள் விலகல் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்ந்தால், அது பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சங்கங்கள் எச்சரிக்கின்றன.
தொழில், ஏற்றுமதி மற்றும் சேவைத் துறைகள் அனைத்தும் நிலையான மின்சார விநியோகத்தையே சார்ந்துள்ளன.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழில் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘பங்குதாரர்களின் ஒப்புதலின்றி அவசரப்படுத்தப்படும் மறுசீரமைப்பு மின் துறையை முழுமையாகக் குலைக்கும்.
அது நாட்டின் போட்டித் திறனையும் உற்பத்தித்திறனையும் நேரடியாக பாதிக்கும்,’ என ஒருவர் குறிப்பிட்டார்.

