இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துர் ரஹ்மான் அல் தானி வலியுறுத்தினார்.
செப்டம்பர் 14 ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத வான்வழித் தாக்குதலை அடுத்து, கத்தார் ஏற்பாடு செய்த அவசர அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் முன்னோடி கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
பிரதமர் தனது உரையில், ‘சர்வதேச சமூகம் இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பாலஸ்தீன சகோதர மக்கள் மீது நடத்தப்படும் அழிப்பு போர், அவர்களை தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது ஒருபோதும் வெற்றியடையாது என்பதை இஸ்ரேல் உணர வேண்டும்,’ எனக் குறிப்பிட்டார்.
கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்ததாவது, திங்கட்கிழமை நடைபெறவுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் அவசர மாநாட்டில், ‘இஸ்ரேல் கத்தார் நாட்டின் மீது நடத்திய தாக்குதல்’ தொடர்பான வரைவு தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளதாகும்.
இந்த உச்சி மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், ஈராக் பிரதமர் முகம்மது ஷியா அல்-சுதானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பாலஸ்தீன தலைவர் மக்மூத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை டோஹாவிற்கு வந்தடைந்தார். துருக்கி ஜனாதிபதி ரெசிப் தையிப் எர்தொகான் பங்கேற்க இருப்பதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம், சவுதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளரான இளவரசர் முகம்மது பின் சல்மான் பங்கேற்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் இவ்வாரத்தின் தொடக்கத்தில் அண்டை நாட்டான கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தார்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளத்தை தங்கவைத்திருக்கும் கத்தார், இஸ்ரேல்–ஹமாஸ் போரில் அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து முக்கிய நடுநிலைமை வகித்து வருகிறது.
ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பஸ்ஸம் நயீம் தெரிவித்ததாவது, 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல் மூலம் காசா போரைத் தூண்டிய ஹமாஸ் இயக்கம், இம்மாநாட்டின் மூலம் ‘ஒருமித்த மற்றும் தீர்மானமான அரபு–இஸ்லாமிய நிலைப்பாடு’ வெளிப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கும் போருக்கும் எதிராக ‘தெளிவான மற்றும் குறிப்பிட்ட நடவடிக்கைகள்’ எடுக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது.

