சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்,
அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரிசிக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால், அனைத்து தரப்பினரும் அந்த அறிவித்தலின்படி அரிசி கொள்வனவு மற்றும் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
அரிசி விற்பனை தொடர்பான சோதனைகள் தொடரும் என்றும், இவ்விஷயத்தில் நுகர்வோர் அதிகாரிகள் வழிகாட்டப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதுவரை அரிசி தொடர்பான 3,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 1,000 வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ரூ.95 மில்லியன் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய தட்டுப்பாடு காரணமாக வர்த்தமானி அறிவித்தலை திருத்த எந்தத் திட்டமும் இல்லை என்றும், அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஏற்ப மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபை அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய அளவு விலை வழங்கி வருவதாகவும், ஆனால் விலைகள் மேலும் உயர்த்தப்பட்டால் நல்லது எனவும் தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைத் தலைவர் மஞ்சுளா பின்நாலந்தா நேற்று (15-09) ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது: ‘தற்போதைய பயிர் பருவத்தில் 46,000 மெட்ரிக் டன் நெல் வாங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் அறுவடை முடிவடைந்துள்ளது. இக்காலத்தில் சபைக்கு உட்பட்ட 146 களஞ்சியங்கள் திறக்கப்பட்டன.
அவற்றில் 109 களஞ்சியங்களுக்கு விவசாயிகள் தொடர்ந்து நெல் கொண்டு வந்தனர், சிலவற்றுக்கு கொண்டு வரவில்லை’ என்றார்.
நெல் கொள்முதல் விலை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: பருவத்துக்கு பருவம் விலைகள் மாறுபடும். தற்போது வழங்கப்படும் விலை சராசரி விலையாகும் என தெரிவித்தார்

