2030க்குள் வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் அரசின் மூலோபாயக் குறிக்கோளை அடைய, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி மேலாண்மை நிறுவனம் இத்தகைய பெரும் எண்ணிக்கையிலானவர்களை பயிற்றுவிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.
இதனால், அந்த நிறுவனம் “Hospitality Labor Force” என்ற பெயரில், தேசிய தொழிற்திறன் தகுதி (NVQ 3) அடிப்படையில் ஆறு மாத தொழிற்பயிற்சி திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பயிற்சிகள், தீவின் பல்வேறு இடங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறையின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களின் வசதிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை பயன்படுத்தி நடத்தப்படவுள்ளன.
விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், கோட்பாட்டு அறிவும் நடைமுறை பயிற்சியும் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கும்.
ஒவ்வொரு குழுவிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 60 நாட்களில் 360 மணி நேர பயிற்சி வழங்கப்படும்.
கல்வி, முகாமைத்துவம் மற்றும் தரத் தணிக்கைப் பொறுப்புகளை இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளும். ஒருவருக்கான செலவு ரூ.55,832.50 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20,000 இளைஞர்கள் 2025 முதல் 2026 வரையிலான காலத்தில் பயிற்றுவிக்கப்படவுள்ளனர். இதற்கான நிதி, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படும்.
மேலும், மீதமுள்ள 80,000 பேருக்கு அரச–தனியார் கூட்டாண்மைகள், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் இணை நிதி உதவிகள் மூலம் பயிற்சி வழங்குவதற்கான வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

