யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூபாய் 2,234 மில்லியன் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து இராசயன மற்றும் தாதியியல் ஆகிய மூன்று பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன.
தற்போது உடற்கல்வியும் சேர்க்கப்பட்டதால், மொத்தம் நான்கு துறைகளில் 952 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு பீடத்திற்கான கட்டிடத்திட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், நிதி நெருக்கடியின் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், பீடம் கடுமையான உட்கட்டமைப்பு வசதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைபாட்டை நீக்குவதற்காக விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள், ஆய்வுக்கட்டுரை அறைகள், பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.

