இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் அதன் கூட்டாளிகள், அமெரிக்க நிதி ஆதரவை விலக்கிக்கொண்ட போதிலும், கொழும்பில் 840 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொள்கலன் முனையத் திட்டத்தின் திறனை காலக்கெடுவுக்கு முன்பே இரட்டிப்பாக்க உள்ளதாக கூட்டாளி நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேற்கு சர்வதேச ஆழ்கடல் முனையம், சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இயக்கும் துறைமுகத்திற்கு அடுத்தே அமைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கைப் பெறுவதற்கான நியூடெல்லி – பீஜிங் போட்டியில் இலங்கையின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
அதானி நிறுவனம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் கட்டத்தை திறந்து முழுமையாக தானியக்க முறையில் செயல்படுத்தியுள்ளது.
இரண்டாம் மற்றும் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2027 பிப்ரவரி மாத காலக்கெடுவை விட மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே, 2026 இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என்று ஜோன் கீல்ஸ் போக்குவரத்து பிரிவு தலைவர் சாஃபிர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடுமையான நிதி நெருக்கடி வெளிநாட்டு முதலீடுகளை மந்தப்படுத்திய நிலையில், திட்டப் பணிகள் இவ்வாறு வேகமாக முன்னேறுவது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.
இறுதி கட்டம் நிறைவடைந்த பின், இந்த முனையம் வருடத்திற்கு 3.2 மில்லியன் கொள்கலன்களை கையாளும் திறனை பெறும். இதில் பெரும்பாலான வர்த்தகம் இந்தியாவிலிருந்தே வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

