அண்மையில் கண்டறியப்பட்ட கன்டெய்னரில் எடுத்த 20 மாதிரிகளில் 17 மாதிரிகள் ‘கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன்’ ஐஸ் எனும் போதைப் பொருள் இருப்பதை தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஈரான் நாட்டிலிருந்து 2024 டிசம்பரில் வந்த இரண்டு கன்டெய்னர்கள், 2025 ஜனவரியில் இலங்கை சுங்கத்தால் முழுமையான சோதனையுடன் விடுவிக்கப்பட்டிருந்தன.
அவை ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டு அலுவலகம் (UNODC) வழங்கிய நவீன கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய எதுவும் அப்போது கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ‘இந்த இரண்டு கன்டெய்னர்களும் பொலீஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (PNB) வேண்டுகோளின்படி மிகக் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது எவ்வித சந்தேகமும் எழவில்லை. ஆனால் இப்போது NDDCB வெளியிட்ட அறிக்கை, புதிய விசாரணை அவசியத்தை வலியுறுத்துகிறது.
பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தரமான கருவிகள் இருந்தும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைனை கண்டறிய இயலாதது எங்களுக்கு விளங்கவில்லை.
கருவிகளின் தரத்தில் குறை காண முடியாது’ என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கன்டெய்னர்களும் 2025 ஜனவரியில் விடுவிக்கப்பட்ட 323 கன்டெய்னர்களில் இடம்பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டபோது, அவை அதற்குள் வரவில்லை என்று அதிகாரி விளக்கினார்.
அவை சிவப்பு அடையாளம் பதிக்கப்பட்ட கட்டாய சோதனைக்குரிய கன்டெய்னர்கள் அல்ல பச்சை அடையாளம் பதிக்கப்பட்டதால் சோதனை இன்றி விடுவிக்கப்பட வேண்டியவையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
PNB தலையீடு செய்யாமல் இருந்திருந்தால், இந்த இரண்டு கன்டெய்னர்களும் சோதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டிருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதற்கான முன்னோடிப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க, இலங்கை அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளதாக UNODC தனது பயணிகள் மற்றும் பொருட்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் (PCCP) வாயிலாக தெரிவித்துள்ளது.

