ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது.
தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது.
இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால நீட்டிப்புடன் நடைமுறையில் இருந்த 57ஃ1 தீர்மானம் முடிவுக்கு வந்த நிலையில், இம்முறை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் – கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகியவை – ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் புதிய பிரேரணையை 60ஃடு.1 எனும் வரைவு வடிவில் சமர்ப்பித்துள்ளன.
இதனை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு (இலங்கை நேரம்) ஜெனிவாவில் உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பிரிட்டன், கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ, வட மெசிடோனியா உள்ளிட்ட நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள், இலங்கைக்கு ஆதரவான மற்றும் எதிரான நாடுகள், இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட நிரந்தர பிரதிநிதி, ‘இலங்கையில் இனப்பிரச்சினை இடம்பெறவில்லை; பயங்கரவாத மோதலே நடந்தது’ என்று வலியுறுத்தினார்.
மேலும், அதற்கான தீர்வு காண சிறப்பு பொறிமுறைகள் தேவையில்லை; நாட்டின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பு வழியே தீர்வு காண முடியும் என்றார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் நிகழ்நிலைக் காவல் சட்டத்தை திருத்துதல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
அதேவேளை, சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள், இலங்கையைச் சார்ந்த ஆதார சேகரிப்பு செயற்திட்டத்தை இரண்டு வருடங்கள் தாமதப்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்வைத்திருந்தது. அதற்கு பதிலாக, புதிய பிரேரணையை நிறைவேற்றும் போது வாக்கெடுப்பைக் கோரமாட்டோம் என இலங்கை இணையனுசரணை நாடுகளுடன் பேரம் பேசியதாகவும், இருந்தபோதிலும் பிரிட்டன் அதனை நிராகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கான போதிய வாக்குகள் தம்வசம் உள்ளன என்ற நம்பிக்கையை பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இலங்கை வாக்கெடுப்பைக் கோரினாலும், தீர்மானம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தினர்.

