மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு, ஒத்திவைக்கப்பட்ட 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11ஆம் திகதி தீர்ப்பளித்தார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், குற்றம் நடந்தபோது 22 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவத்துக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இரு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸார் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் போது சாட்சியங்கள், தடயப் பொருட்கள் மற்றும் வைத்திய அறிக்கைகள் அடிப்படையில் குற்றவாளி மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், மேலும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு நீதிமன்றம் தீர்மானித்தது. குறித்த தொகை செலுத்தப்படாத பட்சத்தில், கூடுதல் சிறைத்தண்டனை அமுல்படுத்தப்படுமென நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடினார்.

