இலங்கையை பிராந்தியத்தில் ; மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களை வழங்கும் நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான மற்றும் ஏற்ற விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டியாவில் திறக்கப்பட்ட 350 மெகாவாட் கொள்ளளவு கொண்ட ‘சோபதனவி’ கலவை மின் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் அவர் இதனை கூறினார்.
இந்த மின் நிலையம் நாட்டின் மின் தேவையின் 12ம% வரை பங்களிக்கிறது.
பிரதமர் தனது உரையில், ‘உலகம் தற்போது நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்தும் மாற்றத்திற்கான யுகத்தில் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை பிராந்தியத்தில்; மிக அதிக மின்சாரக் கட்டணங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட தவறான மேலாண்மையால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்துக்கான மாற்றத்தில் மிகப்பெரிய தடையாக எரிசக்தியின் அநியாயமான செலவுதான் உள்ளது.
இதனை குறைப்பதற்காக எங்கள் அரசு சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் போன்ற புதிய துறைகளை முன்னிறுத்துகிறது’ என்றார்.
அவர் மேலும், ‘மின்சார உற்பத்திக்கான கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகள் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
எண்ணெய் சார்ந்த உற்பத்தியை குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களுக்கு மாறும் செயல் திட்டம் அமுலில் உள்ளது.
இதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் சமமான மற்றும் மலிவான மின்சாரம் வழங்குவதே எங்கள் குறிக்கோள்.
இந்த மின் நிலையம் முழுக்க உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் மனிதவளத்தின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது.
தேவையற்ற மின்சார பயன்பாட்டை குறைத்து, பொறுப்புடன் பயன்படுத்தி, ஒவ்வொருவரும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி, ‘புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களின் கட்டுமானம் சில சமயங்களில் அரசியல் காரணங்களால் தடைசெய்யப்பட்டுள்ளன.
எனினும், எங்கள் அரசின் கொள்கைக்கு ஏற்ப வெளிப்படையான முறையில் தேவையான கொள்முதல் செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.
நிலக்கரி மின் உற்பத்தி இனி சாத்தியமில்லாத நிலையில் மாற்று வழிகளை கவனிக்க வேண்டியது அவசியம்.
இலங்கையின் மனிதவளம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை நமது நாட்டுக்குள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் பலர், தாயகத்திற்கு திரும்பும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதன் பிரதான காரணம் மனிதவளத்தை சரியாக மேலாண்மை செய்யாததே. இதை சரிசெய்வதற்காக அரசாங்கம் மனிதவளத்தை முன்னுரிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேபோல், இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயல் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவு மற்றும் திறன்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பல நிறுவனங்களில் உயர் பதவியிலிருப்பவர்கள் புதிய அறிவை ஏற்றுக்கொள்ளாமல் தடுப்பது மாற்றப்பட வேண்டும்.
நாங்கள் எந்தவித அரசியல் தலையீட்டையும் CEB- ஊழியர்களுக்கு ஏற்படுத்தவில்லை.
அவர்கள் திறம்படச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
CEB- இல் பல கட்டமைப்பு குறைகள் உள்ளன் மறுசீரமைப்பின் மூலம் அனைவரும் தொழில்முறை கண்ணியத்துடன் செயல்படக்கூடிய சூழல் உருவாக்கப்படும்.
ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். இன்று கூட ஒரு சிறிய குழு முயற்சி செய்தது தோல்வியடைந்தது.
ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தாலும், பொய்யான பிரச்சாரங்களால் அவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்’ என்றும் தெரிவித்தார்.

