திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிராக போராடுவோம்’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நாளை (19-09) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.
போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயன்ற போதிலும், அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.
சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களை மீள வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



