மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும் அரசாங்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தின.
கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மின்சார சபையை பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார சபை கிளைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவி, பயனாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, ஊழியர்களின் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி, மின்சார சபை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
ஊழியர்களின் தொழில் பாதுகாப்பும், இதுவரை வழங்கப்பட்ட சலுகைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
காலை 11.30 மணியளவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மின்சார சபை முன்பாக கூடி, வீதியின் இருமறுக்களிலும் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல மணிநேரங்கள் காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதேநேரத்தில், மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளதாவது
‘எமது தொழிற்சங்க நடவடிக்கையின் கீழ் இன்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுகயீன விடுமுறை எடுத்துள்ளனர்.
நேற்று, இன்றும் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டோம். மின் பயனாளர்களை அசௌகரியத்துக்கு ஆளாக்காமல், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்.
ஆனால், ஜனாதிபதி நேற்று நிகழ்வொன்றில் மின்சார ஊழியர்களை கண்டித்தார். பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாமல், அரசாங்கம் வேறு கோணத்தில் அணுகுகிறது.
எமது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் 21ஆம் திகதிக்குப் பிறகு பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்’


