சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைய முடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜெனிவா ஊடக மையத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலை பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன் தொகுத்தளித்தார். இதில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, ஐ.நா. பாலியல் மற்றும் பாலின வன்முறை விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன் மற்றும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறையில்) பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒருமித்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உள்ளகப்பொறிமுறைகளால் அல்லாது, சுயாதீன சர்வதேச விசாரணை மூலமாகவே உறுதி செய்ய முடியும் என்பதை வலியுறுத்தினர்.
ருக்ஷா சிவானந்தன் உரையாற்றுகையில், உள்நாட்டில் நீடித்து வரும் தண்டனையின்மைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறை அவசியம் எனக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையிலும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற வைக்கும் வகையிலும், தமிழ்மக்களுக்கு நீதியை வழங்கும் வகையிலும் சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத் தொடரல் முறைமைகள் விரைவாக நிறுவப்பட வேண்டும் என்றார்.
தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தனது உரையில், 1948 முதல் இலங்கை அரசாங்கங்கள் தமிழ்மக்களுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இனப்படுகொலை, இனவழிப்பு யுத்தம், அரச ஆதரவு வன்முறை, கைது, சித்திரவதை, இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், காணாமலாக்கல்கள், காணி சுவீகரிப்பு போன்ற செயல்களை விரிவாக சுட்டிக்காட்டினார்.
அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனித எச்சங்கள் நிறைந்த புதைகுழி, சுயாதீன சர்வதேச விசாரணையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீளெழும் தன்மையை பாராட்டியதோடு, நீதிக்கான அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் முக்கியமானது என வலியுறுத்தினார்.
இலங்கை தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கும் ஐ.நா. முயற்சியை அவர் வரவேற்றாலும், உண்மையான பொறுப்புக்கூறலை அடைய சுயாதீன சர்வதேச விசாரணை தவிர வேறு வழியில்லை என்றார்.
மேலும், ஆதாரங்களை ஆவணப்படுத்தி முழுமையான வழக்குக் கோப்புகளைத் தயார் செய்யும் பொறுப்பு தமிழ்ச்சமூகத்தின் மேல் இருப்பதை சுட்டிக்காட்டி, பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் வழியாகவும் நீதிக்கான செயற்பாடு தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பொறுப்புக்கூறல் தொடர்பான முயற்சிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் பங்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
சான்றுகளை ஆவணப்படுத்துவதிலும், நீதிக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் தமிழர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தனிப்பட்ட அச்சுறுத்தல்களை மீறியும் முன்னணியில் பணியாற்றி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

