இந்தியாவிலிருந்து படகு மூலமாக நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்துவரும் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து உதவியமை காரணமாக கைதான ‘ஆனந்தன்’ எனும் நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து செயல்பட்ட கஞ்சா கடத்தல்காரர் பிடிபட்டுள்ளார்.
இக்குற்றவாளி படகு மூலமாக கஞ்சாவை மட்டுமல்லாமல், பாதாள உலக கும்பலினரையும் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவி செய்திருக்கலாமா என்பதையும் பொலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை வழக்கில் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று நேபாளத்தில் ஒக்டோபர் 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தியின் ஒப்புரவின் அடிப்படையில் முதலில் ‘ஆனந்தன்’ கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது ‘ஆனந்தன்’ வழங்கிய தகவலின் பேரில் மற்றொரு கஞ்சா கடத்தல் சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

