நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழைவீழ்ச்சியினால் களுகங்கையைச் சூழ்ந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கை நீர்மட்டம் உயர்வதால் இரத்தினபுரி, மில்லகந்த, எல்லகாவ உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்ட உயர்வு பதிவாகியுள்ளதுடன், தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது உடனடியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இல்லை எனவும் விளக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அதிக மழைவீழ்ச்சி தொடருமானால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், களுகங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல், களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த குடியிருப்பாளர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்கால மழைவீழ்ச்சி நிலைமைக்கு ஏற்ப வெள்ள அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

