மாகாணங்களுக்குக் கிடைத்த அதிகாரங்கள் மக்கள் நலனில் பயன்படுத்தப்பட வேண்டுமானால், மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார். எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தி வரும் முரண்பட்ட கருத்துகள் குறித்து வினவியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஒருபுறம் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என கூறப்படும் நிலையில், மறுபுறம் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதி செய்யப்பட்ட பின் புதிய முறையில் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படியான குழப்பத்துக்குச் சாட்சி, அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஆட்சியாளர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததே.
உண்மையில் தேர்தலை நடத்த விரும்பினால், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் பழைய முறைமையில் உடனடியாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டுமானால், அதற்கான பாராளுமன்ற அனுமதி முதலில் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
எல்லை நிர்ணயம் எனக் கூறி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எல்லை மாற்றம் செய்ய வேண்டுமானால் அதிக கால அவகாசம் தேவை, ஒரே வருடத்தில் அது நிறைவேறாது. இதனால், அரசாங்கம் உண்மையில் என்ன செய்யப் போகிறது என்பதில் பெரும் சந்தேகம் எழுகிறது.
கடந்தகாலங்களில் எல்லை மாற்ற முயற்சிகள், தென் பகுதியில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் மலையகத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படும் என்ற பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. ஆகவே இது சுலபமான செயல் அல்ல என்பதை அரசு உணர வேண்டும்.
ஒருபுறம் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அடுத்த வருடம் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் எந்த மாதத்தில் நடைபெறும் என அரசு தெளிவாக கூறவில்லை. தேர்தல் சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படாத வரை, தேர்தல் ஆணையம் எந்த தீர்மானத்தையும் அறிவிக்க இயலாது.
தற்போது மாகாணங்கள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் கூறுவதை தான் செயல்படுத்த முடியும். மக்கள் ஆட்சியின் அடிப்படை கோட்பாடு பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ் மக்கள் எழுச்சியுடன் மாகாணசபைத் தேர்தலை கோர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவர் முடிவில், கிடைத்த அதிகாரம் மக்களால் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போதைய நிலை அரசாங்கம் தேர்தலை இழுத்தடிக்க முயற்சி செய்வதாகவே தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.

