மாகாணசபைத் தேர்தலுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துவதற்கான தேவையான சூழல் உருவாக்கப்பட்டால், அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிழையால் மாகாணசபைத் தேர்தல் காலவரையற்ற வகையில் ஒத்திவைக்கப்படவில்லை. பாராளுமன்றம் கொண்டு வந்த புதிய தேர்தல் முறைமை காரணமாக ஏற்பட்ட சட்ட சிக்கலே இதற்குக் காரணம். எந்த முறைமையைப் பின்பற்றி தேர்தலை நடத்துவது என சட்ட ரீதியாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரப்பட்டபோதும், இதற்கு தீர்வு காண வேண்டியது பாராளுமன்றத்தின் பணியாகும் என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.
மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் நீடிப்பது ஜனநாயக அம்சங்களுக்கு முரணானது என்பதையும், மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
அரசியல் தரப்பினரின் புதிய அக்கறையை அவர் வரவேற்றதுடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டம் இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரியது எனவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தல் நடைபெற வேண்டுமெனில், இவ்வாண்டுக்குள் சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான அரசின் விரைவான நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தகவல் இல்லை என்றும், தேவையான சூழலை அரசு ஏற்படுத்தினால் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளோம் என்றும் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

