இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி சந்திப்பு ஒன்றை நடத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மின்சார அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவும், இலங்கை ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமையிலான இலங்கை குழுவும் இதில் பங்கேற்றன.
இரு தரப்பினரும் மின்சார வலையமைப்பு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதற்கு முன்னர், 2025 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப அளவுகோள்களை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியிருந்தன.
இந்த மின் இணைப்பு திட்டம் மூலம், மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் இலங்கை இந்தியாவிடமிருந்து மின்சாரம் இறக்குமதி செய்யும் வசதியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை(renewable energy) இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
அத்துடன், இது இலங்கையின் ஆற்றல் ஏற்றுமதி துறையைப் பன்முகப்படுத்தி, மின் வலையமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதுடன், பிராந்திய மின்சார சந்தையில் இணைவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக கலந்துரையாடல்களை இரு தரப்பினரும் தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

