தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் காரணமாக, சொந்த பாதுகாப்பிற்காக வாளை தன்னுடன் வைத்திருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமக்கு போதுமான பாதுகாப்பு வழங்காத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும், தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அர்ச்சுனா மேலும் தெரிவித்ததாவது —
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, இதற்கு முன்பு இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதேபோல், சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றை வழங்குமாறும் கோரியிருந்தேன்; ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
பின்னர், குறைந்தது விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ‘ஸ்ப்ரே துப்பாக்கி’ ஒன்றை கோரிய போதிலும், அதற்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
“எனவே, என் சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை எப்போதும் காரில் வைத்திருக்கிறேன். இதுகுறித்து சபாநாயகருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளேன்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

