இலங்கை தனது மக்கள் தொகை வரலாற்றில் அமைதியாக ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — குறைவான குழந்தைகள் பிறப்பு, நீண்ட ஆயுள், மேலும் அதிவேகமாக முதிர்ந்து வரும் மக்கள் தொகை என்பன இதன் அடையாளங்களாகும்.
கொழும்பில் இந்த வாரம் வெளியிடப்பட்ட 2024 மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை தற்போது 21,763,170 ஆக உயர்ந்துள்ளது. 2012ஆம் ஆண்டிலிருந்து இது 14 இலட்சத்திற்கும் சிறிதளவு அதிகமான உயர்வாகும். எனினும், இந்த எண்ணிக்கையின் அடியில் மறைந்திருப்பது ஒரு முக்கியமான உண்மை — நாட்டின் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தற்போது 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிகக் குறைந்த நிலையாகும்.
ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த தேசிய கணக்கெடுப்பை நடத்திய மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS), இந்த எண்கள் வெறும் புள்ளிவிபரங்களல்ல, நாட்டின் அடையாளத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி எனக் குறிப்பிடுகிறது.
‘இது வெறும் தரவு வெளியீடல்ல் நம்முடைய சமூகத்தின் முகத்தைக் காட்டும் பிரதிபலிப்பு,’ என திணைக்கள பொது இயக்குநர் சியாமளி கருணாரத்ன கூறினார். ‘இது நாம் யார் ஆகிவருகிறோம் என்பதையும், எங்கள் எதிர்காலம் எந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது,’ என்றார்.
150 ஆண்டுகளில் இது முதன்முறையாக முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக நடத்தப்பட்டது. இதன் மூலம் வேகமான, துல்லியமான மற்றும் பரந்த அளவிலான தரவு சேகரிப்பு சாத்தியமாகியது.
கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் எண்ணிக்கைப் பணிகள் 2025 ஆரம்பம் வரை நீண்ட போதிலும், நாடு முழுவதும் மக்கள் தொகை மாற்றத்தின் முழு படிமத்தை DCS வழங்க முடிந்தது.
கணக்கெடுப்பின் மையக் கண்டுபிடிப்பாக ஒரு முக்கியமான உண்மை வெளிப்பட்டது — இலங்கை வேகமாக முதிர்ந்து வருகிறது. பிறப்புகள் குறைந்து வருகின்றன, ஆனால் ஆயுள் அதிகரித்து வருகிறது.
‘செய்தி தெளிவாக உள்ளது — குழந்தைகள் பிறப்புகள் குறைந்துள்ளன,’ என UNFPA பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். ‘குறைந்த பிரஜனை விகிதத்துடன் கூடிய இந்த மந்தநிலை, இலங்கையின் வயது கட்டமைப்பில் அடிப்படை மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.’
நிபுணர்கள் இதை ‘மக்கள்தொகை திருப்புமுனை’ என குறிப்பிடுகின்றனர். இளம் தலைமுறையால் உற்சாகமடைந்த நாடாக இருந்த இலங்கை, இப்போது சுருங்கும் தொழிலாளர் பலத்தையும் அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கையையும் எதிர்கொள்கிறது. இதன் விளைவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் ஓய்வூதிய அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் பெரிதும் காணப்படும்.
UNFPA வெளியிட்ட உலக மக்கள்தொகை அறிக்கையின் படி, பிறப்பு விகிதம் குறையும் போது நாடுகள் மக்கள் தொகை வளர்ச்சியை நிர்வகிப்பதிலிருந்து மனித மூலதனத்தில் — குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களில் — முதலீடு செய்யும் திசையில் மாற வேண்டும். ‘முக்கியம் என்னவென்றால், மதிப்புடன், உற்பத்தியுடன், இணைப்புடன் வயதைச் சமாளிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குவதே,’ என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகத்துறை நிபுணர்கள் ஆகியோர் புள்ளிவிபரங்களை மட்டும் அல்லாது, அவை குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் என்ன அர்த்தம் கொண்டுள்ளன என்பதைப் பற்றி கலந்துரையாடினர்.
‘ஒவ்வொரு எண்ணிக்கையின்பின் ஒரு மனிதரின் வாழ்க்கை இருக்கிறது,’ என UNFPA பிரதிநிதி குறிப்பிட்டார். ‘வயது, பாலினம், உடல் நிலை, இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட இந்த விவரமான தரவுகளைப் பயன்படுத்தி, யாரும் பிந்தியேறாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும்.’
மேலும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பங்குபற்றல் போன்ற அம்சங்களை வெளிப்படுத்தும் பாலின அடிப்படையிலான தரவுகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ‘பெண்கள் வளர்ந்தால் சமுதாயமும் வளர்கிறது,’ என்றார்.
நிகழ்வில் ஊடகத்துறையினருக்கு ஒரு முக்கியமான செய்தி வலியுறுத்தப்பட்டது — மக்கள் தொகை தொடர்பான தகவல்களை சரியாகவும் பொறுப்புடன் வெளிப்படுத்துவது அவசியம். ‘மக்கள்தொகை அச்சம்’ உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ருNகுPயு நினைவூட்டியது.
மக்கள்தொகை வளர்ச்சி மந்தமாவதை ஒரு நெருக்கடி என அல்லாமல் ஒரு மாற்றம் என புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கருணாரத்ன கூறினார். ‘இது அச்சம் பற்றியதல்ல் இது முன்னோக்கிய பார்வை பற்றியது,’ என்றார்.
வரும் மாதங்களில் இளைஞர்கள், முதியோர், இடம்பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைக் கவனமாக ஆராயும் தனிப்பட்ட தலைப்புச் செய்திகள் வெளியிடப்படும் என மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. முழுமையான கணக்கெடுப்பு அறிக்கை 2025 டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்ட 2024 கணக்கெடுப்பு தரவுகள் இலங்கைக்குப் புதிய திருப்புமுனையாக அமைகின்றன. ‘நாம் எப்போதும் நமது எதிர்காலத்தை குழந்தைகளில் கண்டோம்; இனி நமது முதியோர்களில் நமது அறிவை காண வேண்டும் — அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்,’ என நிகழ்வில் பங்கேற்ற ஒருவரின் வார்த்தைகள் நாட்டின் புதிய நிலையை ஆழமாக பிரதிபலித்தன.

