இலங்கையில் மருத்துவ நிபுணர்கள் (Consultants) பற்றாக்குறை கடுமையாக நீடித்தாலும், பொதுமருத்துவ அதிகாரிகள் (Medical Officers) பணி நிலை முழுமையாக நிரம்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை மருத்துவர்களை நாடு திரும்பி சேவையை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
நிபுணர் நிலைகளில் கடும் குறைவு
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜுன திலகரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:
‘நிபுணர் துறையில் பெரிய அளவிலான குறைவு உள்ளது. அனுமதிக்கப்பட்ட நிபுணர் பணியிடங்கள் சுமார் 2,800 ஆகும்.
ஆனால் தற்போது சுமார் 2,000 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் வெளிநாட்டுக்குச் சென்றவர்களின் புலம்பெயர்வு தற்போது குறைந்துள்ளது. பலர் மீண்டும் திரும்பி வருகின்றனர்,’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, பொதுமருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள் (அதாவது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களில் பணிபுரியும் பொது மருத்துவர்கள்) தற்போது நிரம்பிய நிலையில் உள்ளன.
‘அதனால் மருத்துவர்கள் தேவையில்லை என பொருள் கொள்ளக்கூடாது. மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்த, கூடுதல் நியமனங்களுக்கு அனுமதி பெற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,’ என்றார்.
வெளிநாட்டு மருத்துவர்களை மீண்டும் அழைக்கும் முயற்சி
அமைச்சர் ஜயதிஸ்ஸா சமீபத்தில் இங்கிலாந்துக்குச் செய்த உத்தியோகபூர்வ பயணத்தின் போது அங்கு வாழும் இலங்கை நிபுணர் மருத்துவர்களை சந்தித்து, நாட்டுக்குத் திரும்பி சேவை செய்யுமாறு சிறப்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் நேரடியாகவே, இலங்கையில் நிபுணர் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டார்.
சில துறைகளில் மட்டுமே தீவிர பற்றாக்குறை
இதைத் தொடர்ந்து, டாக்டர் திலகரத்ன விளக்கமளித்தபோது, நாட்டுக்கு திரும்பும் மருத்துவர்கள் மொத்த அமைப்பை வலுப்படுத்தினாலும், உடனடி பற்றாக்குறை சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே காணப்படுவதாக கூறினார்.
‘மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள் என பலர் உள்ளனர்.
ஆனால் சில தொலைதூரப் பகுதிகளிலும் புதிய அடிப்படை மருத்துவமனைகளிலும் தேவையான அளவு நிபுணர்கள் இன்னும் இல்லை,’ என்றார்.
இந்த வெற்றிடங்களை அடுத்த ஒரு ஆண்டுக்குள் நிரப்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். ‘வெளிநாட்டில் பயிற்சிக்காக சென்ற பல நிபுணர்கள் அடுத்த ஆண்டு திரும்புவார்கள்,’ என்றும் கூறினார்.
குறைவான துறைகள்
அனஸ்தீசியா (மயக்க மருத்துவம்), விபத்து மற்றும் அவசர சிகிச்சை, புதிதாகப் பிறந்த குழந்தை மருத்துவம் (நேழயெவழடழபல), மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி (Pடயளவiஉ ளுரசபநசல) போன்ற துறைகளில் தற்போது கடும் நிபுணர் பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் திரும்பும் எண்ணம் வெளிப்படுத்தியுள்ளனரா எனக் கேட்டபோது, டாக்டர் திலகரத்ன பதிலளித்ததாவது:
‘பல மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் செல்லும்போது திரும்புவோம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அனைவரும் அவ்வாறு திரும்புவதில்லை,’ என்றார்.
இதனால், நாட்டின் மருத்துவ அமைப்பில் நிபுணர் நிலைகளின் பற்றாக்குறை தொடர்ந்து ஒரு முக்கிய சவாலாகவே நீடிக்கின்றது

