இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அடையாளமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 1 முதல் 29 வரை மொத்தம் 1,53,063 சுற்றுலாப் பயணிகள் இலங்கையைப் பார்வையிட்டுள்ளனர். இதில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக விளங்குகிறது. அந்த காலப்பகுதியில் 44,741 இந்தியர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இது மொத்த வருகைகளில் 29.2 சதவீதம் ஆகும்.
அதேபோல், பிரித்தானியாவில் இருந்து 12,128, ரஷ்யாவில் இருந்து 10,450, சீனாவில் இருந்து 10,408, ஜெர்மனியில் இருந்து 8,950 மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 7,226 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதன் மூலம் இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் அக்டோபர் 29 வரை இலங்கையைப் பார்வையிட்ட மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 18,78,557 என SLTDA தெரிவித்துள்ளது.
இவர்களில் இந்தியாவில் இருந்து 4,20,033, பிரித்தானியாவில் இருந்து 1,74,021, மற்றும் ரஷ்யாவில் இருந்து 1,32,594 பேர் வருகை தந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

