இலங்கையின் காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக புதிய ஹாட்லைன் எண் 1995 இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம், காடு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளின் திறனை மேம்படுத்தி, காடுகளை சார்ந்த குற்றச்செயல்களைத் தடுக்கும் முயற்சியாகும்.
ஹாட்லைன் மூலம் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் வனவிலங்கு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இயக்க மையத்திற்கு வரும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, காடுகள் தொடர்பான குற்றச்செயல்கள் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
இதன் மூலம், அதிக அளவில் காடு சேதங்கள் நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை தடுக்க தேவையான துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

