இந்தியாவின் சென்னையில் உள்ள என்னூர் கடற்கரையில் குளிக்கச் சென்ற நான்கு பெண்கள் சக்திவாய்ந்த அலைகளில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 31ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடந்தது என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளது.
இந்திய காவல்துறையினர் தெரிவித்ததாவது — மரணமடைந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ். தேவகி செல்வம், 19 வயதான எஸ். பவானி, 17 வயதான ஜே. ஷாலினி மற்றும் 18 வயதான எம். காயத்ரி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேவகி செல்வம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்தார். மற்ற மூவரும் அவருடைய பணியிட சக ஊழியர்களும் நண்பர்களுமாவர்.
காவல்துறையினர் கூறியதாவது — அவர்கள் என்னூர் அருகிலுள்ள மெட்டுக்குப்பம் கடற்கரையின் தனிமையான பகுதியொன்றில் நீராடச் சென்றுள்ளனர்.
ஆரம்ப விசாரணையின் படி, முதலில் ஷாலினி கடலில் இறங்கியபோது ஒரு பெரிய அலை அவரை இழுத்துச் சென்றது. அவரை மீட்க மற்ற மூவரும் கடலில் இறங்கியபோது, அவர்கள் கூட அதே அலைகளால் அடித்து செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

