செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு காலணி, 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரியது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செம்மணி மனித புதைகுழியை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதை கூறினார்.
அவரது விளக்கத்தில், “புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணியில் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த காலணி தயாரித்த நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அக்காலணி 1985 முதல் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, அந்த காலணி 1995ஆம் ஆண்டுக்கு முன்னையதாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்,” என நிரஞ்சன் தெரிவித்தார்.
மேலும், இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 239 என்புக்கூடுகள் (மனித எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்வதற்கான செலவீன மதிப்பீட்டு அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியால் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும், தேவையான நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.
என்புக்கூடுகளை ஆராய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் ஆகியோர் உட்பட, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பிற மனித புதைகுழிகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஏழு நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் இவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்

