யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன், தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாக எழுப்பும் வரலாற்றுப் பயணத்தை சரியாக மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலய திறப்பு விழாவில் உரையாற்றிய அவர்,
‘இன்று நாங்கள் கலந்து கொள்கிற நாள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பொன்னெழுத்துக்களால் எழுதும் ஒரு முக்கியமான நாள்’ எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:’எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் குறித்து பலரும் பலவிதமாக விமர்சிக்கலாம்.
சிலர் எமது கட்சியை பலவீனமானதாகக் கருதலாம். ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களின் எதிர்காலம் என்பதை உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
2009 ஆம் ஆண்டுவரை உயிர் தியாகம் செய்து இந்த மண்ணில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்து, அந்த இலட்சியத்தை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
அதை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.இந்த மண்ணில் எமது தேசம் அங்கீகரிக்கப்படும் வரை, எமது மக்கள் கௌரவமான வாழ்க்கையை வாழும் வரை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடரும்.
அழுத்தங்கள், சதிகள், துரோகங்கள் வந்தாலும், நாங்கள் எமது இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டோம்.
எமது கட்சி ஒரு சந்தர்ப்பவாத அரசியல் இயக்கமாக ஒருபோதும் மாறாது. எமது மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் கடமையைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது எமது உறுதியான நம்பிக்கை.
அதிலிருந்து விலகி, முன்னுதாரணமான ஒரு இயக்கமாக எமது கட்சி செயல்படும். எதிர்காலத்தில் இந்த மண்ணில் எமது செயற்பாடுகள் மக்கள் முன் தெளிவாகத் தெரிய வரும்.
எந்த இழப்புகளும், தேர்தல் தோல்விகளும் எம்மை பின்வாங்கச் செய்யாது. தமிழ் தேசியத்தின் எழுச்சிக்காக ஒவ்வொருவரும் இணைந்து நம்முடன் பயணிக்க வேண்டும்’ என்று சட்டத்தரணி மணிவண்ணன் வலியுறுத்தினார்.


