பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் அரசாங்கத் தீர்மானத்துக்கு சில ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற அரசாங்கக் கூற்றை இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எதிர்கொண்டு, அதற்கான ஆதாரத்தை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில் இதுவரை எந்தவித மாற்றமும் இல்லையென அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசுகையில், ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததாவது:
‘பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டது கல்வி, அறிவியல், உளவியல் துறைகளின் நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஆகும்.
எனவே பாடசாலை நேரத்தை அரைமணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்க அரசாங்கம் எந்த ஆய்வை மேற்கொண்டது என கல்வி அமைச்சரிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
இதற்கான எந்தவிதமான ஆதாரமோ, ஆய்வோ இல்லை,’ என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலை நேரத்தை நீட்டிப்பதற்கான நடைமுறை சாத்தியம் குறித்தும் ஜோசப் ஸ்டாலின் சந்தேகம் வெளியிட்டார்.
உத்தியோகப்பூர்வமாக, ஆசிரியர் சங்கங்களின் நிலைப்பாடு மாறவில்லை எனவும் அவர் மறுபடியும் வலியுறுத்தினார்.

