யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தில் பயன்படுத்தும் நிலையிலுள்ள துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு இயந்திரம் மற்றும் தாக்குதல் துப்பாக்கி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பு அமைப்புகளில் பெரும் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காவல்துறை மற்றும் சிசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே இந்தக் கண்டுபிடிப்பு நடைபெற்றது.
நூலகக் கட்டிடத்தின் மேல்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவற்றில் வு-56 துப்பாக்கியின் சில பாகங்கள், இரண்டு துப்பாக்கி மகசீன்கள், மூன்று சிறிய குண்டுத் தோட்டாக்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கிளேமோர் மைன் வெடிகுண்டு இயந்திரம், மின்கம்பிகள், மருத்துவப் பொருடகள்;; மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன
அனைத்து பொருட்களும் காவல்துறையினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என காவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, குண்டுகளும் பொருட்களும் சமீபத்திய நிலையில் பதுக்கப்பட்டு இருந்ததால் பாதுகாப்பு பிரிவுகள் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், பல்கலைக்கழக அதிகாரிகள் இவை போர்காலத்தில் மறைக்கப்பட்டவையாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
ஆனால் இந்தக் கூற்றை விசாரணை அதிகாரிகள் சந்தேகத்துடன் அணுகியுள்ளனர்.
பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பல்கலைக்கழக நூலகக் கட்டிடம் போர் முடிந்த பின் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புதுப்பிப்பு பணிகளின் போது இதுபோன்ற எந்தப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு கடுமையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. ‘பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரமும் அவற்றின் நிலையும் மிகுந்த கவலைக்குரியது,’ என பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

