யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் கூரையில் மறைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் போருக்காலத்திலிருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊடகங்களிடம் பேசிய காவல்துறை ஊடகப்பேச்சாளர் மற்றும் உதவி பொலி மா அதிபர், வழக்கறிஞர் எப்.யூ. வுட்லர் தெரிவித்ததாவது:
‘இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாயுதங்கள் நீண்ட காலமாக அங்கு இருந்திருக்கலாம்; பெரும்பாலும் போர்காலத்திலிருந்தே இருக்கக்கூடும் என நாங்கள் நம்புகின்றோம்.’
காவல்துறையின் தகவலின்படி, இவ்வாயுதங்களும் வெடிமருந்துகளும் பல்கலைக்கழக நூலகத்தின் கூரையில் மறைக்கப்பட்டிருந்தன.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நூலகத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுகையில், இரண்டு துப்பாக்கி மெகசின்களும் ஒரு கம்பி சுருளும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் காவல்துறைக்கு அறிவித்தது. பின்னர் மறுநாள் (31ஆம் தேதி) காலை காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை (ளுவுகு) அதிகாரிகள் அவற்றை கைப்பற்றினர்.
பழுதுபார்ப்பு பணிகள் தொடர்ந்தபோது, அதே நூலகத்தின் மற்றொரு பகுதியில் மேலும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒரு வு-56 துப்பாக்கி, இரண்டு மெகசீன்கள் சில வெடிமருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியிருந்தன.
இதனைத் தொடர்ந்து காவல்துறையும் சிறப்பு பணிக்குழுவும் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளன. மேலும் ஆயுதங்கள் அங்கு மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

