2018 கண்டி முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்: 7 ஆண்டுகளுக்குப் பின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்ச்சைக்குரிய அறிக்கை
2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் திகணை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) 7 ஆண்டுகள் கழித்து தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால், புகார் அளித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் தமிழ் மொழி பேசுவோர் என்பதையும் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
60 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் 41 வயது கொண்ட லாரி ஓட்டுனர் ஹீப்பிட்டியெ கெதர குமாரசிங்கே கொலை சம்பவம் குறித்த விவரங்களுக்கு பெரிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குமாரசிங்கே கொலைச் சம்பவம் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய தாக்குதலுக்கான உடனடி காரணமாகக் கூறப்பட்டாலும், கந்தியில் வெடித்த சிங்கள தீவிரவாத வெறி இதற்கு மட்டும் அடிப்படையாக அமைக்கவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குமாரசிங்கே கொலைக்காக கைது செய்யப்பட்ட நால்வர், ‘நாங்கள் அவரை இன அடிப்படையில் தாக்கவில்லை; அவரின் இனத்தை கைது செய்யப்பட்ட பின்னரே அறிந்தோம்’ என (HRCSL)விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில் தெல்தெனிய பொலிஸார், குற்றவியல் சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, ICCPR சட்டத்தின் 3(1) பிரிவின் கீழும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
சாதாரண தகராறை இன அடிப்படையிலான வெறி குற்றமாக மாற்றியதன் மூலம், பொலிஸார் ஆரம்பத்திலிருந்தே இனவாத வன்முறைக்குத் திண்ணை அமைத்தனர் என அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அரசின் பொறுப்பு மறைக்கப்பட்டது
அறிக்கையில் அரசாங்க அமைப்புகள் — குறிப்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் — சம்பவங்களில் வகித்த பங்கு தெளிவாக அடையாளப்படுத்தப்படவில்லை. முஸ்லிம் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய உறுதியான ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அறிக்கையில் ஒரே ஒருவராக சிங்கள தீவிரவாத அமைப்பான ‘மஹாசோன் பலகயா’வின் தலைவர் அமித் வீரசிங்கே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அவர்மீது நேரடி குற்றச்சாட்டு அல்ல, நிகழ்வின் விவரிப்பே இடம்பெற்றுள்ளது.
அழிவின் அளவு
அறிக்கையின்படி, மொத்தம் 290 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன் இதில் 243 தாக்கப்பட்டு சேதமடைந்தவை, 47 தீவைத்து எரிக்கப்பட்டவை
இதில் 17 வீடுகள் பல்லேகலை பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. அதிக அளவில் அழிவுகள் கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவில் (106 வீடுகள்) பதிவாகியுள்ளன.
மேலும் 220 வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன — இதில் 96 தீக்கிரையாக, 121 தாக்குதலால் சேதமடைந்தன.
மொத்தம் 20 முஸ்லிம் வழிபாட்டு இடங்கள் மற்றும் ஒரு புத்தமத கோவில் தாக்கப்பட்டன. அவற்றில் 6 பள்ளிவாசல்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படைகள் இருந்தபோதும் தாக்குதல்கள்
இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவம் பார்த்துக்கொண்டிருந்த நிலையிலேயே நிகழ்ந்தன.
இந்நிலையில் அவசரநிலைச் சட்டங்களும், ஊரடங்கும் அமலில் இருந்தன.
மொத்தம் 230 பேர் கைது செய்யப்பட்டிருந்தபோதிலும், பலர் பின்னர் நீதிமன்றம் வழியாக விடுதலை செய்யப்பட்டனர்.
பல வீடியோக்களில் அமித் வீரசிங்கே, தொலைதூர மாவட்டங்களிலிருந்து பேருந்துகள் வருவதாக பொலிஸாருக்கு தெரிவித்தது காணப்பட்டபோதும், அதற்கு விசாரணையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
சான்றுகள் புறக்கணிக்கப்பட்டன
முஸ்லிம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாய், எழுத்து, புகைப்பட ஆதாரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருந்தும், சில விடயங்களே அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
முக்கியமான வழக்குகளில் அரசின் பங்கு வெளிப்படையாகக் காட்டப்பட வேண்டியிருந்தாலும், ர்சுஊளுடு மிகுந்த கவனத்துடன் அரசைக் குறிக்காமல் அறிக்கை தயாரித்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மொத்தத்தில், இந்த அறிக்கை 7 ஆண்டுகள் கழித்து வெளிவந்திருந்தாலும், முஸ்லிம் சமூகத்துக்கு நீதி வழங்கும் நோக்கத்தை விட, அரசியல் பாதுகாப்பையே முன்னிருத்தியதாக பலரும் கருதுகின்றனர்.
தமிழில் தாமரைச்செல்வன்
