இஸ்ரேலின் உச்ச இராணுவ சட்ட ஆலோசகர் யிஃபத் டோமர்–யெருஷல்மி, பாலஸ்தீன கைதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்டது மற்றும் உயர் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தது குறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வாரம் ராஜினாமா கடிதத்தில், விசாரணை நடத்தும் இராணுவ அதிகாரிகள் மீதான வலதுசாரி தாக்குதல்களை தணிக்கவே அந்த வீடியோ வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது, ‘அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல், நீதித்துறை தடங்கல் மற்றும் இரகசிய தகவல் வெளியீடு’ போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வு, இஸ்ரேலில் சட்டத்தின் ஆட்சியும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான பொறுப்புணர்வும் கடுமையாக கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இடம்பெறுகிறது. ஐ.நா. அறிக்கையொன்றில் இது ‘கொலைவெறி போர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஜூலை மாதத்தில், ‘சிட் டெய்மான்’ எனப்படும் இராணுவ தடுத்துவைத்தல் மையத்தில் நடத்திய சோதனையில் 11 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காசாவைச் சேர்ந்த ஒருவரை கடுமையாக தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நபர் பல காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த டோமர்–யெருஷல்மிக்கு எதிராக வலதுசாரி அரசியல்வாதிகள் ‘இஸ்ரேலின் கௌரவத்தை களங்கப்படுத்தியவர்’ என குற்றம் சாட்டினர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இந்தச் சம்பவம் இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுமக்கள் உறவு தாக்கம் ஏற்படுத்திய ஒன்று’ எனக் கூறினார்.
2024 ஆகஸ்ட் மாதத்தில் போராட்டங்கள் தீவிரமானபோது, டோமர்–யெருஷல்மி அந்த வீடியோவை கசியவிட்டதாக தனது ராஜினாமா கடிதத்தில் ஒப்புக்கொண்டார். சில நாட்களில், ஐந்து வீரர்கள் மீது ‘கடுமையான தாக்குதல் மற்றும் உடல் சேதம் ஏற்படுத்தல்’ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவர்கள் தற்போது காவலில் இல்லை எனவும் சட்ட கட்டுப்பாடுகளின்றி உள்ளனர் எனவும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்மீது தொடர்ந்து மிரட்டல்கள் எழுந்து வந்தன. அவரது வாகனம் டெல் அவிவ் கடற்கரையில் காலியாகக் காணப்பட்டதும், உயிர் ஆபத்து அச்சம் எழுந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் மீண்டும் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல்கள் தொடங்கின. வலதுசாரி விமர்சகர் யினோன் மகால், ‘இப்போது நாம் லிஞ்சிங் தொடரலாம்’ என ஓ தளத்தில் பதிவிட்டார்.
இஸ்ரேல் மற்றும் அதன் இராணுவம், தங்களது சுயாதீன நீதித்துறை அமைப்பே சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு எதிரான முக்கிய பாதுகாப்பு என்று இதுவரை கருதி வந்தன. ஆனால் இப்போது அந்த அடிப்படை நம்பிக்கையே வலதுசாரிகளின் அழுத்தத்தால் சிதைகிறது.
இஸ்ரேல் திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாகில் லெவி இதுகுறித்து கூறுகையில், ‘முன்பு இராணுவ சட்ட அதிகாரியின் பணி, சர்வதேச நீதிமன்ற வழக்குகளிலிருந்து வீரர்களை காப்பதேயாக இருந்தது. ஆனால் இப்போது அந்த சட்ட உணர்வும் நழுவி, மத அடிப்படையிலான விலக்குகளுடன் சட்டத்தை மீறும் போக்கு உருவாகி வருகிறது,’ என்றார்.
இச்சம்பவம், இஸ்ரேல் இராணுவத்தின் சட்டப் பொறுப்பும் மனித உரிமைகளும் மீண்டும் சர்வதேச அளவில் கடுமையாக சோதிக்கப்படும் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

