இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தில், இனி உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீட்டு சபை (BOI) விதித்த கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இம்முதலீட்டாளர்கள் இவ்வருட இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ((MoU) கையெழுத்திடவுள்ளதாகவும், அடுத்த வருடம் முதல் பயிரிடும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் ஏழு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில நிறுவனங்களுக்கு கஞ்சா இலைகள், மலர்கள் மற்றும் தாவரத்தின் பிற பகுதிகளை ஏற்றுமதி செய்ய அரசாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சில குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்க உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
திட்டத்தின் அடுத்த கட்டத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் இணைவது திட்டத்தை மேலும் வெற்றிகரமாக மாற்றும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இத்திட்டம் மிரிகமாவில் அமைந்துள்ள 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட முதலீட்டு சபைக்கு சொந்தமான நிலத்தில், சிறப்பு பாதுகாப்பு சூழலில் முன்னெடுக்கப்படவுள்ளது. மொத்தம் 37 விண்ணப்பங்களில் இருந்து, ஏழு நிறுவனங்கள் விசேஷ நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

