சில வணிகர்கள் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் (சிலிசிலி பைகள்) வாடிக்கையாளர்களிடம் கட்டணத்துக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சு, இது ஒரு நிலையான தீர்விற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை மட்டுமே என விளக்கியுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் போலிதீன் பயன்பாட்டுக்கு வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜயகொடி இதுகுறித்து தெரிவித்ததாவது,
‘இது முழுமையான தீர்வு அல்ல் ஆரம்ப கட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இதற்கான வரி விதிக்கப்படும். அப்போது வணிகர்கள் கட்டாயமாக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெற வேண்டியிருக்கும்.
எங்களது நோக்கம் போலிதீன் பயன்பாட்டை குறைப்பதே இது சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக மாறியுள்ளது.
இந்தத் திட்டம் அந்த முயற்சியின் தொடக்கம்,’ என கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘சிறிய அளவு கட்டணம் விதிப்பதால் போலிதீன் பைகள் முழுமையாக பயன்படுத்தப்படாது என கூற முடியாது ஆனால் இது நுகர்வோரைக் கவனமாக நடக்கச் செய்யும்.
முன்பு பொருட்கள் வாங்கும் போது 12 பொருட்களுக்கு 5 அல்லது 6 பைகள் வழங்கப்பட்டன.
ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை இரண்டு பைகளாகக் குறையும். இதன் மூலம் மொத்தமாக போலிதீன் பயன்பாடு குறையும்,’ எனக் கூறினார்.
நவம்பர் 1ஆம் திகதி முதல், கைப்பிடியுடன் கூடிய பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை வாடிக்கையாளர்களிடம் கட்டணத்துக்கு வழங்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
இது 2003ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் (ஊயுயு யுஉவ ழே. 9 ழக 2003) கீழ், அக்டோபர் 1ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வணிகர்கள்Low-Density Polyethylene (LDPE) அல்லது Linear LDPE வகை பைகளைக் இலவசமாக வழங்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பையின் விலையும் வணிக நிலையங்களில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும்; மேலும் அது வாடிக்கையாளர்களுக்கான பில்லிலும் குறிப்பிடப்பட வேண்டும் என ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் போலிதீன் பைகளின் அதிகப்படியான பயன்பாட்டை கட்டுப்படுத்துவது ஆகும்.
ஏனெனில் அவை சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமான முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளன.
இருப்பினும், சில வணிகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது, இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகலாம் என்றும், சிறிய அளவிலான வணிகங்களுக்கு கூடுதல் செயல்பாட்டு செலவுகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.

