14ஆம் நூற்றாண்டில் உயிரிழந்த ஒரு இளைஞனின் எலும்புக்கூட்டில் இருந்து, எடின்பர்கில் கருப்புச் சாவு (Black Death) நோய்க்கான முதல் அறிவியல் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது என்று எடின்பர்க் நகர சபை அறிவித்துள்ளது.
அந்த இளைஞனின் பற்களில் காணப்பட்ட படிகத்தில், பியூபோனிக் பிளேக் (Bubonic Plague) நோயை ஏற்படுத்திய பாக்டீரியாவின் மரபணு அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வெலும்புக்கூடுகள் முதலில் 1981ஆம் ஆண்டு எடின்பர்க் நகரிலுள்ள செயிண்ட் ஜைல்ஸ் பேராலயத்தின் மைதானத்தில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்டன. தற்போது அவை மேம்பட்ட அறிவியல் முறைகள் — பழமையான டி.என்.ஏ. வரிசைபடுத்தல் (Ancient DNA Sequencing), ஐசோடோப் (Isotopic) ஆய்வு, மற்றும் ரேடியோகார்பன் (Radiocarbon) தேதியிடல் — ஆகியவற்றின் மூலம் மீளாய்வு செய்யப்பட்டன.
எடின்பர்க் நகர சபையின் தொல்பொருள் துறை பொறுப்பாளர் ஜான் லாசன், “இது மிகவும் உற்சாகமூட்டும் கண்டுபிடிப்பு” எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வு, 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களை காவு கொண்ட “கருப்புச் சாவு” நோய் எடின்பர்க் நகரத்தையும் தாக்கியிருக்கலாம் என்ற வரலாற்று நம்பிக்கைக்கு அறிவியல் உறுதிப்படுத்தலாக கருதப்படுகிறது.

