இலங்கை சுங்கத்துறை, 2025ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை மீறி 117 வீத வருவாயை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல், பாராளுமன்றத்தின் “Ways and Means” குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் சுங்க வருவாய் ரூ.1,737 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட ரூ.1,485 பில்லியன் இலக்கை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரும் வருவாய் உயர்வாக கருதப்படுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமை தாங்கியிருந்தார்.
வாகன இறக்குமதிகள் சுங்க வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளன.
அக்டோபர் 14ஆம் திகதி வரையில் வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் ரூ.587.11 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது. இது மொத்த சுங்க வருவாயின் 37 வீதமான பங்கை வகிக்கிறது.
அதில், இறக்குமதி செய்யப்பட்ட 55,447 தனியார் கார்கள் மூலம் ரூ.474.26 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், 7,331 பொருள் கடத்தல் வாகனங்கள் மூலம் ரூ.48.67 பில்லியன், 142,524 மோட்டார் சைக்கிள்கள் மூலம் ரூ.30.37 பில்லியன், 15,035 மூன்று சக்கர வாகனங்கள் மூலம் ரூ.15.10 பில்லியன், மற்றும் 1,679 பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் ரூ.12.66 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.
அத்துடன், கூட்டத்தில் சுங்கத்துறையின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய புதிய மின்னணு நு-வுநனெநசiபெ முறைமையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், இது பிற அரசுத் துறைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் பிரதி அமைச்சர்கள் பேராசிரியர் ருவன் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பி. பெரேரா, சுஜீவ சேனசிங்க, சுஜித் சஞ்சய பெரேரா, சுனில் பியன்விலா, சாம்பிக்க ஹெட்டியாரச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் சிவாலி அருக்கொடை தலைமையிலான மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

